மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா பாதுகாப்புப் பணிகள் குறித்த செய்தியாளர் சந்திப்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கரோனா சிறப்பு அலுவலர் சந்திரமோகன் ஐஏஎஸ் கலந்துகொண்டு பேசினர்.
அப்போது பேசிய அமைச்சர், "தமிழ்நாடு அரசு தற்போது சிகிச்சை பெறுபவர்களை விரைவாக குணமடையச் செய்வதில் கவனம் செலுத்திவருகிறது. அதன்படி அவர்களுக்கு தமிழ்நாடு அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் அடங்கிய மருந்துப் பெட்டகம் வழங்கப்பட்டுவருகிறது.
அந்தப் பெட்டகத்தில் கபசுரக் குடிநீர் சூரணம் 50 கிராம், ஆடாதொடை மணப்பாகு 100 மில்லி, தாளிசாதி சூரணம் மாத்திரைகள் 50, வைட்டமின் மாத்திரைகள் 10, ஜிங்க் மாத்திரைகள் 10, ஆர்செனிகம் ஆல்பம் 30 ஆகியவை அடங்கியுள்ளன. தமிழ்நாடு முழுவதும் காய்ச்சல் பரிசோதனை மையங்கள் அமைப்பதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்திய மருத்து ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்), பல சுகாதார அமைப்புகள் வழங்கியுள்ள ஆலோசனையின்படி தேவையான இடங்களில் கிருமிநாசினி தெளிக்கின்ற நடைமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றிவருகிறோம்" எனத் தெரிவித்தார்.
அதையடுத்து பேசிய சந்திரமோகன் ஐஏஎஸ், "அமெரிக்காவிலுள்ள தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பு மருந்துகளில் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
அதனால் தமிழ்நாடு அரசிடம் அம்மருந்தை வாங்க கோரிக்கைவைக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து தற்போது 1100 டோஸ்சஸ் வாங்கப்பட்டுள்ளது. இன்று அல்லது நாளைக்குள் அம்மருந்து மதுரைக்கு வந்தடையும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா பரவலைக் கண்காணிக்க சிறப்பு தொழில்நுட்பம் அறிமுகம்!