மதுரையில் கடந்த மார்ச் இரண்டாவது வாரத்தில் தொடங்கிய கரோனா தொற்று மே, ஜூன் மாதங்களில் கடுமையாக அதிகரித்தது. ஜூன் இறுதி வாரத்திலிருந்து தொற்றின் வீரியம் குறையத் தொடங்கியுள்ளது.
கரோனாவால் தற்போது வரை அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையை காட்டிலும் குணமடைந்து வீட்டிற்கு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
மதுரையில் கரோனா தொற்று காரணமாக இன்று புதிதாக 151 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 97 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
மதுரையில் மட்டும் இதுவரை 12 ஆயிரத்து 515 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 11 ஆயிரத்து 151 பேர் முழுவதுமாக குணமடைந்துள்ளனர். தற்போது ஆயிரத்து 56 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை 308 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
பிளாஸ்மா தானம் மூலமாக 7 பேர் இதுவரை குணமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாளொன்றுக்கு சராசரியாக 3 ஆயிரத்தில் இருந்து 4 ஆயிரம் பேர் வரை கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதன் காரணமாக தற்போது தொற்று பரவும் வேகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை நகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் மிகத் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன.