மதுரையை சேர்ந்த லயோனல் அந்தோணிராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், “கரோனா நோய்த் தொற்றின் காரணமாக அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் பணியாளர்கள் அதிக நேரம் மருத்துவமனையில் இருந்து வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது.
இதனால் மருத்துவமனையில் மருத்துவ பணியாளர்கள் மற்றும் கரோனா நோயாளிகளுக்கு மூன்று வேளை உணவு மற்றும் சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த உணவுகள் வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத் துறை மூலமாக வழங்கப்படுகிறது. இதற்காக கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தங்கள் வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருக்கிறது. கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கப்படும் போது தமிழ்நாடு ஒப்பந்த விதிகளின்படி ஒப்பந்தத்தில் வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும்.
ஆனால் இந்த ஒப்பந்தத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை, இதற்காக ஒதுக்கப்படும் பணத்தில் 50 சதவீதம் மட்டுமே செலவிடப்படுகிறது.
ஒப்பந்தத்தில் வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனு செய்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.
எனவே கரோனா நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவிற்கான விடப்படும் ஒப்பந்தங்கள் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க நடவடிக்கை எடுக்கவும், முறைகேடு குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.