மதுரையில் நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் முழுமையாக நிரம்பிவிட்டன.
தொடர்ந்து நாளொன்றுக்கு ஆயிரம் பேர் நலம் பெற்று வீடு திரும்பும் நிலையிலும் 1,200 பேர் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். தொடர்ச்சியாக போதிய ஆக்ஸிஜன் இல்லாத நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.
இதனிடையே நேற்று (மே.10) மதுரை சின்ன உலகாணியைச் சேர்ந்த சோலைமலை என்ற முதியவர் மதுரை கருப்பாயூரணி பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து, பரிசோதனைக்காக 25 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்ட சில நிமிடங்களில், தனியார் மருத்துவமனை ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அவரை அனுமதிக்க முடியும் என்று மருத்துவமனை வாசலிலேயே உயிருக்கு ஆபத்தான நிலையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக அவரைக் காத்திருக்க வைத்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட சூழலிலும், போராடிய முதியவரை படுக்கை இல்லாத நிலையி்ல் நீண்ட நேரம் காக்க வைத்திருந்தனர். போதிய படுக்கைகள் இல்லை என கூறியதால் முதியவரை அழைத்து வந்தவர்கள் உயிருக்குப் போராடிய நிலையில் வீட்டிற்கே மீண்டும் அழைத்துச் சென்றனர். ஏராளமான பொதுமக்கள் முன்பாக நடைபெற்ற இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதனிடையே மதுரை அரசு கரோனா மருத்துவமனையில் போதிய படுக்கைகள் இல்லாத நிலையில் நோயாளிகளையே தரையில் கிடக்க வைத்து சிகிச்சையளிக்கக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சமூக வலை தளங்களில் வீடியோ ஒன்று பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.