சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரசின் தாக்கம் மற்ற நாடுகளிலும் அதிவேகமாகப் பரவிவருகிறது. குறிப்பாக இந்தியாவில் 147 பேருக்கு கோவிட்-19 பெருந்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வைரஸ் பெருந்தொற்று தீவிரமடையும் முன் பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முன்னெடுத்துவருகிறது.
தமிழ்நாட்டில் மார்ச் 31ஆம் தேதி வரை பள்ளி-கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள், பொழுதுப்போக்கு மையங்கள், அரசு அலுவலங்கள் என அனைத்தையும் மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மக்கள் பொது இடங்களில் கூடவும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதன் ஒருபகுதியாக, மதுரை விமான நிலையத்திற்கு வெளிநாடுகளிலிருந்து வரக்கூடிய பயணிகளுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய மதுரை மாநகராட்சியின் சுகாதாரத் துறை சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் கரோனா கண்டறிதல் சோதனை நடத்தப்பட்டுவருகிறது.
இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக வெளிநாட்டுப் பயணிகள் மட்டுமின்றி உள்நாட்டுப் பயணிகளுக்கும் கரோனா வைரஸ் பாதிப்பைக் கண்டறியும் சோதனை நடைபெற்றுவருகிறது. விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனிங் மூலம் காய்ச்சல், சளி, இருமல் போன்றவைகள் இருக்கின்றனவா எனச் சோதனை செய்யப்படுகிறது.
தற்போது வரையில் சிங்கப்பூர், துபாய், இலங்கை போன்ற நாடுகளிலிருந்தும் டெல்லி, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய பகுதிகளிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வருகைதந்துள்ள 20 ஆயிரம் பயணிகளிடம் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு சோதனைக்குள்ளாக்கப்பட்ட பயணிகளிடம் கரோனா பாதிப்பிற்கான அறிகுறிகள் தென்படவில்லை என்று மதுரை மாநகராட்சியின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : 'திமுக ஆட்சியில் டெண்டர்கள் எப்படி விடப்பட்டன? லிஸ்ட் என் கையில்...!' - முதலமைச்சர்