மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், கரோனா பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தடுப்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி இன்று (ஏப்.08) முதல் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட முதல் 20 வார்டுகளைத் தேர்ந்தெடுத்து அப்பகுதிகளில் கரோனா பரிசோதனை முகாம்களை அதிகரிக்கவும், பாதிப்பு அதிகம் உள்ள தெருக்கள், பகுதிகளைக் கண்டறிந்து ஏற்கனவே பின்பற்றப்படும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி அப்பகுதிகளை அடைத்து, பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் வழங்குதல், கபசுரக் குடிநீர் வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும் மாநகராட்சி அலுவலர்களுக்கு ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிகிறார்களா, சமூக இடைவெளியைப் பின்பற்றுகிறார்களா என்பனவற்றைக் கண்காணிக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.