மதுரை: மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம் நான்கில் சத்யசாய் நகர் சாய்பாபா கோயிலில், ஜூலை 22ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் மதுரைக்கு வர உள்ளார்.
இந்த நிலையில், நிகழ்ச்சி நடைபெற உள்ள குறிப்பிட்டப் பகுதிகளில் சாலைகளை சீர் அமைத்தல், தெரு விளக்குகளைப் பராமரித்தல், சாலைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் உள்ளிட்டப் பல்வேறு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி, மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
இந்தக் கடிதம் குறித்து, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், மாநகராட்சியின் சுற்றறிக்கை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் அதில், 'அரசின் எந்த விதிகளின் படி, மதுரை மாநகராட்சியின் உதவி ஆணையாளர் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார் என்பதை மதுரை மாவட்ட நிர்வாகம் உடனடியாக விளக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் உள்ள இந்த சுற்றறிக்கை பல்வேறு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்த நிலையில் இந்த பிரச்சினை பற்றி மதுரை மாநகராட்சி ஆணையாளர் கே.பி.கார்த்திகேயனிடம் கேட்டபோது, 'ஆர்எஸ்எஸ் தலைவர் உயர் பாதுகாப்பு பெற்றவர். அவர் மட்டுமல்ல அவரைப் போன்ற உயர் பாதுகாப்பு விஐபிகள் வரும்போது போலீஸார் அறிவுறுத்தலின் பேரில் இதுபோன்ற உத்தரவுகள் பிறப்பித்து அவர்கள் செல்லும் பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்வது குறித்து மாநகராட்சி ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்படும். அவர்கள் செல்லும்பகுதியில் ஏதாவது போக்குவரத்திற்குத் தடை ஏற்படாமல் இருக்கவே இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது' என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் - அமைச்சர் கே.என்.நேரு