மதுரை: திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா கருப்பூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார். அதில், நான் கருப்பூர் கிராம ஊராட்சி துணைத் தலைவராக உள்ளேன். திருச்சி மாவட்டத்திற்கு ஜல் ஜீவன் இயக்கத் திட்டத்தின் கீழ் 38.3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்தின் கிராமங்களுக்கு குடிநீர் வசதிக்காக 3.38 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வசதிக்காக 1.75 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது .
மத்திய அரசின் இந்த ஜல் ஜீவன் இயக்கத் திட்டத்தில் ஒப்பந்தம் புள்ளி கோருவது குறித்து மத்திய அரசும் , மாநில அரசும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. இந்த திட்டம் மாநில, மத்திய, கிராம ஊராட்சி பங்களிப்போடு நிறைவேற்றப்படுகிறது
இதில், மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்கு சேகர் என்பவர் ஒப்பந்தம் பெற்றுள்ளார். மருங்காபுரியில் ஒப்பந்தம் பெற்ற சிஆர்சிஎம் என்ற நிறுவனத்தில் மணப்பாறை எம்எல்ஏ சந்திரசேகரன், அவரது மனைவி தமிழ்ச்செல்வி, மகன் பிரசாந்த் ஆகியோர் உறுப்பினராக உள்ளது தெரிகிறது.
இவர்களுக்கு எந்தவிதமான முன் அனுபவமும் இல்லை. ஒப்பந்தம் வழங்க எந்த விதமான வழிமுறைகளும் பின்பற்றப்படவில்லை. எனவே மணப்பாறை மற்றும் மருங்காபுரி ஊராட்சி ஒன்றியங்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்த புள்ளி ஒப்பந்தங்களுக்கு டிஆர்டிஏ பணம் வழங்க கூடாது. இந்த தகுதியற்ற ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்க தடை விதிக்க வேண்டும்.
ஜல் ஜீவன் இயக்கத் திட்டத்தின் கீழ் தகுதியற்ற நபர்களுக்கு ஒப்பந்தம் வழங்கிய அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எஸ். ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த வழக்கு குறித்து, குடிநீர் வழங்கல் வாரிய மேலாண்மை இயக்குநர், திருச்சி மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 3ஆம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.