கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கை தமிழ்நாடு அரசு பிறப்பித்தது.
இந்நிலையில், மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியம், திருப்பரங்குன்றம் தாலுகா ஆகிய பகுதிகளில் நாளை நள்ளிரவு முதல் 30ஆம் தேதிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமென தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
மேலும், ஞாயிற்றுக்கிழமை மட்டும் பால், மருந்து கடைகள் தவிர்த்து அனைத்து கடைகளும் மூடப்படும். காய்கறி, பலசரக்குகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வழங்கக்கூடிய கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை மட்டும் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி மருத்துவ தேவைகளுக்கு மட்டும் வாகனங்கள் இயங்கலாம் எனவும், அத்தியாவசிய பொருள்கள் வாங்க வாகனங்களை பயன்படுத்தக்கூடாது, ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குள்ளாக நடந்து சென்று வாங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதேசமயம், ரயில் மற்றும் விமானங்களில் வருபவர்கள் இ-பாஸ் மூலமாக வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.