மதுரை: புதுக்கோட்டை கண்ணன் என்பவர் பொது நல மனு ஒன்றை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “புதுக்கோட்டை மாவட்டம், 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பு சமவெளி காடுகளைக் கொண்ட மாவட்டமாகும். இந்த இயற்கைக் காடுகள் முழுவதுமாக அழிக்கப்பட்டு அவ்விடங்களில் தைல மர தோப்புகள் ஏற்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்தத் தைல மரத் தோப்புகளில் வளர்க்கப்படும் மரங்கள் பெரும்பாலும் காகிதக்கூழ் தயாரிப்பதற்கும், தொழிற்சாலைகளில் உள்ள நீராவிக் கலங்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. இதைத் தவிர வேறு எதற்கும் இந்த மரங்கள் பயன்படுவதில்லை.
ஏற்கனவே இருந்த இயற்கைக் காடுகள் அழிக்கப்பட்டதால், இந்தப் பகுதியில் இருக்கும் 6,003 பாசனக் குளங்களுக்கும் தண்ணீர் வரத்து இல்லை. மேய்ச்சல், கால்நடை வளர்ப்பு ஆகியவையும் பாதிக்கப்பட்டுள்ளன. மான், முயல் உள்ளிட்ட வன உயிரினங்களும் அழிந்து விட்டன. இதற்கு இங்கிருந்த இயற்கைச்சூழல் காடுகள் அழிக்கப்பட்டதே காரணம்.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டும், எங்கள் மாவட்டத்திற்கு இருக்கவேண்டிய 33 விழுக்காடு காடுகள் இல்லாமல் இருப்பதை கவனத்தில் கொண்டும், இப்போது இருக்கின்ற வனப் பகுதியில் 25 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் குறைந்தபட்சம் 20 விழுக்காடு நிலத்தை அந்தந்த ஊராட்சி மன்றத்தின் பொறுப்பில் அளிக்க வேண்டும்.
பின்னர் அவற்றை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் இருக்கும் பணியாளர்களை கொண்டு இயற்கைக் காடுகளை உருவாக்க நடவடிக்கை எடுத்தால் வனப்பரப்பு அதிகரிக்கும்.
கிராமக் காடுகளை வளர்க்கும் திட்டத்தை, கிராம ஊராட்சி சட்டமும், வனம் மற்றும் சுற்றுசூழல் சட்டமும் அனுமதிக்கிறது. எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டப் பணியாளர்களைக் கொண்டு சமூக காடுகள் வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:கோலி vs கேன்; முதல் கோப்பையை முத்தமிடப்போவது யார்?