மதுரை: கிராமப்புற பகுதிகளில் சாலைகள் அமைப்பது, குடிநீர் வசதிகளை ஏற்படுத்துவது, வடிகால் வசதி என பல்வேறு அடிப்படை கிராம வளர்ச்சி பணிகளைச் செய்ய அரசின் மூலமாக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்த நிதியைப் பெற ஊராட்சிமன்ற தலைவர்களின் அனுமதியை இணையத்தின் மூலமாக பெறும் வகையில், ஒவ்வொருவருக்கும் தனியாக இணைய வழி கடவுச்சொல் (ஆன்லைன் லாகின் கீ) கொடுக்கப்பட்டு உள்ளது. நிதியைப் பெற ஊராட்சி மன்றத் தலைவர்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் கீழ் உள்ள ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற தலைவரின் நிதியின் கீழ் ஒப்பந்தம் மூலம் செய்யப்படும் கிராம வளர்ச்சி பணிகளில் முறைகேடு செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதில் லட்சக்கணக்கான ரூபாய் கையாடல் செய்ததாக புகார் எழுந்தது.
அதில் பல்வேறு திட்டங்களுக்கான ஒப்பந்தம் அறிவிக்கமாலேயே பணிகள் நடைபெற்றதாகவும், திட்டத்திற்கான நிதி எடுக்கப்பட்டு உள்ளதாகவும் புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து இந்த நிதி முறைகேடு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் விசாரணை நடத்த உத்தரவிட்டு இருந்தார். அதன்படி ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற தலைவரின் நிதியின் கீழ் ஒப்பந்தம் மூலம் செய்யப்படும் கிராம வளர்ச்சி பணிகளில் ஊராட்சி மன்ற தலைவரின் இணையவழி கடவுச்சொல்லை பயன்படுத்தி பல லட்ச ரூபாய் முறைகேடு செய்தது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனையடுத்து செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராமர், உதவி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முனியப்பன், காந்திமதி, சிவக்குமார், சாந்தி, ஊராட்சி ஒன்றிய பொறியாளர் சிக்கந்தர் உள்பட 6 பேரை பணியிடை நீக்கம் செய்து மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டு உள்ளார்.
கிராம வளர்ச்சி திட்டங்களுக்காக ஊராட்சிமன்ற தலைவரின் நிதியின் கீழ் வைக்கப்பட்டு இருந்த நிதிப்பணத்தை ஊராட்சிமன்ற தலைவரின் லாகின் கீயை பயன்படுத்தி நூதன முறையில் பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக 6 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: 9 வயது சிறுமியின் கிதாபி மஸ்தி நூலகம்... வருங்காலத்தின் அறிவுக் கண்ணை திறக்கும் நிகழ்கால மழலை!