திண்டுக்கல் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மதுரை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். பின்னர், பெருங்குடியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பெண் குழந்தைக்கு ஜெயபிரபா என பெயர் சூட்டினார்.
பின்னர் பேசிய அவர், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கண்ட கனவான தென் மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் எய்ம்ஸ் கொண்டுவரப்படும் என அருமையான திட்டத்தினை, தற்போது அவரது ஆசைப்படி மத்திய அரசை வற்புறுத்தி, பிரதமர் மோடி வந்து அடிக்கல் நாட்டும் வகையில் இன்றைய அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
எய்ம்ஸ் மருத்துவமனை தமிழ்நாட்டிலேயே மதுரையில் அமைந்ததுதான் மதுரைக்கு பெருமை. எத்தனை மாவட்டங்கள் இருந்தாலும் மதுரைக்கு மட்டும்தான் அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. அதிர்ஷ்டம் உள்ள மாவட்டம் மதுரை மாவட்டம் தான்” என பெருமிதம் கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்தாலும், ஜெயலலிதாவின் எண்ணம்படி இன்றைய அரசு நடைபெறும். மதுரையில் போக்குவரத்து அதிகமாக இருந்துவந்தது. ஆனால், இன்று போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டு போக்குவரத்து நெரிசல் இல்லாத பகுதியாக மதுரை மாற்றப்பட்டுள்ளது.
மேலும், குடிநீர் வசதியும் இல்லாத நிலைமை இருந்தது என்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் என்னிடம் கேட்டார்கள். அதற்கு இணங்க இந்த குடிநீர் திட்டத்தை அறிவித்து இன்னும் சில காலங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வயலில் ஷூ போட்டு நடக்க முதலமைச்சர் என்ன ஸ்டாலினா?- அமைச்சர் ஜெயக்குமார்