மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை பெறுகின்ற மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் காப்பீடு அட்டை பெறுவதற்காக வந்து செல்கின்றனர். ஆனால், அவர்களில் பலருக்கு காப்பீட்டு அட்டைகள் கிடைக்கவில்லை என்றும்; அதற்காக நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய அவலமும் ஏற்படுகிறது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து ஜபருல்லா என்பவர் பேசுகையில், 'கடந்தாண்டு நவம்பர் மாதம் காப்பீட்டுத் திட்டத்திற்காக விண்ணப்பித்தேன். ஆனால், இதுவரை எனக்கு கிடைக்கவில்லை. நாள்தோறும் இங்கு வந்து செல்கிறேன். இதனால் அன்றாட எனது பணிகள் பாதிக்கப்படுகின்றன. என்னைப்போன்ற இங்குள்ள பொதுமக்கள் அனைவரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்கிறார்.
இதனையடுத்து, குருவம்மாள் என்ற பெண்மணி பேசுகையில், 'ஒவ்வொரு முறை வரும்போதும் கம்ப்யூட்டர் வேலை செய்யவில்லை என்கிறார்கள். காலையில் வந்தால் மாலை வரை எங்களுக்கு நேரம் ஆகிவிடுகிறது' என்றார்.
ஒட்டுமொத்த மதுரை மாவட்டத்திற்கும் இது ஒரே ஒரு காப்பீட்டுத் திட்ட மையமாக இருப்பதால், அனைத்து பகுதியைச் சேர்ந்த மக்கள் இங்குதான் வந்து குவிய வேண்டிய நிலை ஏற்படுகிறது.
ஆகையால், மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கும் முயற்சியை இ-சேவை மையங்கள் மூலமாகவோ அல்லது அந்தந்த தாலுகா அலுவலகங்கள் மூலமாக வழங்குவதற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் அனைவரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:மதுரை ஆரப்பாளையத்தில் இளைஞர் வெட்டிக்கொலை