மதுரை: தூத்துக்குடி புது கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ரவி. தொழிலதிபரான இவர், பாஜகவின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார். சமூக வலைத்தளங்களில் பெரியார், திமுக, முதலமைச்சர் உள்ளிட்ட அனைவர் பற்றியும் அவதூறு கருத்துகளை பதிவிட்டு வந்துள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் திமுக பற்றியும், அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பற்றியும் அவதூறான கருத்துக்களை பதிவு செய்துள்ளார். அதனடிப்படையில், ஆகஸ்ட் மாதம் திருவிடை மருதூர் காவல் நிலையத்திலும், செப்டம்பர் மாதம் தஞ்சாவூர் காவல் நிலையத்திலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அக்டோபர் மாதம் சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், “ஜான் ரவி தன்மீது உள் நோக்கத்தோடு பொய்யாக புனைவு செய்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். எனவே, ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மனுதாரர் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் அருவறுக்கத்தக்க வார்த்தைகளால் தமிழக முதல்வர், திமுக மற்றும் அதன் மக்கள் பிரதிநிதிகளை பற்றி பதிவிட்டு, சட்ட ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துகிறார். தொடர்ந்து இதனை செய்து வருகிறார்” என வாதிடப்பட்டது. இதனைப் பதிவு செய்த நீதிபதி, மனுதாரரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் குறித்து அவதூறு பதிவு - முன்னாள் டிஜிபி நடராஜ் மீது வழக்குப்பதிவு!