மதுரை மாவட்டம், மேலூர் பகுதியைச் சேர்ந்த பொண்ணுபிள்ளை என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "எனது கணவர் மேலூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக குப்பை அள்ளும் வண்டியில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி பணியில் இருந்தபோது எனது கணவர் மயங்கி அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருமல், சளி, காய்ச்சல் ஆகியவை தொடர்ந்து இருந்ததால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள கரோனா தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, கடந்த ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டு கரோனா தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் முன்களப் பணியாளராக எனது கணவர் பணியாற்றி வந்த நிலையில் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார். கரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்த முன் களப் பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
எனவே, எனது கணவர் இழப்பிற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்" எனக் கூறியிருந்தார். இந்த மனு, நீதிபதி ஆனந்த வெங்கடேசன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு முதன்மை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ததால் தட்டுப்பாடா?