மதுரை: மானகிரி ஆவின் சந்திப்பு 2வது நுழைவு வாயில் அருகில் புதிதாக கட்டப்படவுள்ள கோரிப்பாளையம் சந்திப்பு மேம்பாலம் மற்றும் மதுரை - தொண்டி சாலையில், சாலை மேம்பால கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை முன்னிட்டு கமுதி செல்லும் வழியில் மதுரை வந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு கோரிப்பாளையம் மற்றும் அப்பலோ சந்திப்பில் மேற்கொள்ளப்பட உள்ள புதிய மேம்பாலப்பணிகளைத் துவங்கி வைத்தார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 61ஆவது குருபூஜை மற்றும் 116ஆவது ஜெயந்தி விழா நடைபெறுவதை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் சென்றார். நேற்று (அக். 30) மாலை மதுரை வந்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
தொடர்ந்து இன்று (அக். 30) காலை 8 மணியளவில் மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு மதுரை ஆவின் சந்திப்பு அருகே நடைபெற்ற விழாவில் நெடுஞ்சாலைகள் துறையின் சார்பாக ரூ.150.28 கோடி மதிப்பீட்டில் அப்பல்லோ சந்திப்பு அருகிலும், ரூ.190.40 கோடி செலவில் கோரிப்பாளையம் சந்திப்பிலும் கட்டப்படவுள்ள புதிய மேம்பாலப் பணிகளைத் கொடியசைத்து துவங்கி வைத்தார்.
பிறகு தெப்பக்குளம் அருகே அமைந்துள்ள மருது சகோதரர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ.வேலு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் மதுரை நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ராமநாதபுரம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் ஆலயத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.
இதையும் படிங்க: முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!