மதுரை: விளாங்குடியைச் சேர்ந்த இரணியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தமிழை பூர்வீகமாகக் கொண்டு மலைப்பகுதியில் வசித்தவர்கள் குறவர் சமூகத்தினர். தமிழ்நாட்டில் எஸ்.சி. எஸ்.டி பட்டியலில் உள்ளனர்.
மலைப்பகுதியில் இருந்து தற்போது சமதள பரப்பில் வசிக்கும் மக்களுக்கு, மலைக்குறவன், குறவன் உள்ளிட்ட பெயர்களும் உண்டு. கடந்த 1951 ஆம் ஆண்டு எம்.பி.சி. பட்டியலில் நரிக்குறவர்கள் சேர்க்கப்பட்டனர். குறவர்கள் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள்.
ஆனால், நரிக்குறவர்களின் சமயம், பழக்க வழக்கம், திருமண முறைகள் வேறுபாடு கொண்டது. நரிக்குறவர்கள் ஆந்திராவில் குருவிக்காரர்கள் என்றும், குஜராத்தில் வாக்கிரிவாலா என்றும் அழைக்கப்படுகின்றனர். நரிக்குறவர்கள் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் அல்ல என்றும் ஆந்திரா மற்றும் குஜராத்தில் இருந்து வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறவர் என்ற பெயரை எம்.பி.சி. பட்டியலில் உள்ள நரிக்குறவர் என்ற பெயரில் இருந்து நீக்க வேண்டும். அவர்களை நரிக்காரர், குருவிக்காரர், வாக்கிரிவாலா, நக்கலே என எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். குறவர், குறவன் என்பது தமிழை தாய் மொழியாக கொண்ட எங்களின் பெயர். இதனால் கல்வி, வேலைவாய்ப்பில் பெரும் பாதிப்பு ஏற்படுவதாக மனுவில் கூறினார்.
மனு குறித்து விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், மற்றும் சத்திய நாராயண பிரசாத் அமர்வு, மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: அம்பேத்கர் நினைவு கூட்டத்திற்கு தடை.. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தர்ணா!