மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த காளிதாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அதில், "தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளில் பொது மக்களின் துணையோடு குடிமராமத்து பணியை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நீர்நிலைகளிலிருந்து களிமண், வண்டல் மண், சவுடு மண் ஆகியவற்றை விவசாயிகளும், மண்பாண்டம் செய்வோரும் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதன் வரம்புக்குட்பட்ட 13 மாவட்டங்களில் சவுடு மண் எடுக்க தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் அதனை கருத்தில் கொள்ளாமல் அரசு சவுடு மண்ணை எடுக்க அனுமதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆகவே அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பை சட்ட விரோதமானது என அறிவித்து ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், "அது செய்திக் குறிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. விவசாய பணிக்காகவும் மண்பாண்டங்களை செய்யவும் வண்டல் மண், களிமண் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், "மதுரை கிளை 13 மாவட்டங்களில் சவுடு மண் எடுக்க தடை விதித்துள்ள நிலையில் எவ்வாறு அதையும் குறிப்பிட்டு செய்திக் குறிப்பு வெளியிட்டீர்கள்? என கேள்வி எழுப்பினார். அதற்கு அரசு தரப்பில், "இது தொடர்பாக பதில் மனுவை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நீதிபதிகள் எத்தனை பதிவு செய்யப்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் உள்ளனர்? என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: திமுக ஒன்றியக்குழு தலைவர் செயல்பட விதிக்கப்பட்ட தடையை நீக்கியது நீதிமன்றம்!