தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் சித்ரவதை செய்யப்பட்டு, துன்புறுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு, பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.
இந்நிலையில், ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரில் யாரேனும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கிடவேண்டும், சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணையை மேற்கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்டவர்களுக்கு மருத்துவ தகுதி சான்றிதழ் வழங்குவது சம்பந்தமாக நீதிமன்றம் வகுக்கும் விதிமுறைகளை தமிழ்நாடு அரசும், காவல்துறையும் , சிறைத்துறையும் பின்பற்ற உத்தரவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் கடந்த மாதம் 29ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ரிட் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நேற்று (ஜூலை9) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பபட்டது. அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வழக்குரைஞர்கள் எல்.சாஜிசெல்லன், டி.சீனிவாசராகவன், எஸ்.எம்.மோகன்காந்தி, இ.சுப்புமுத்துராமலிங்கம் ஆகியோர் ஆஜராகினர்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் மருத்துவ தகுதி சான்றிதழ் வழங்குவது சம்பந்தமாக மாதிரி வழிகாட்டும் விதிகளையும் தாக்கல் செய்ய வழக்குரைஞர்களுக்கு அனுமதி வழங்கியது.
மேலும் இந்த மனுவிற்கு தமிழ்நாடு அரசு பதில் மனுதாக்கல் செய்திடவும், சாத்தான்குளம் காவல்நிலைய மரணம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மேற்கொண்டு வரும் வழக்கில் சிபிஐ நிலை அறிக்கை தாக்கல் செய்திடவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க:தமிழ்நாடு அரசின் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம்