விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்பு தொடர்பாக மதுரையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாய அமர்வில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் நான்கு நாட்கள் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதன் முதல் நாள் நிகழ்வில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தற்போது நடைபெற்று வரும் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் நாடு கடந்த தமிழீழ அரசு சார்பில் உருத்திரக்குமார் கலந்துகொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. தீர்ப்பாயத்தில் நான் பேசுவதற்கு வாய்ப்பு வழங்குவதாக கருத்துக்கேட்புக் கூட்டத்திற்கு தலைமை வகிக்கும் நீதிபதி உறுதியளித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக்கோரும் போது அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. புலிகளின் மீதான தடையை நீட்டிப்பதே மத்திய அரசின் குறிக்கோளாக இருக்கிறது. அதனால் தான் தடைக்காலத்தை இரண்டு ஆண்டு என்பதிலிருந்து ஐந்து ஆண்டுகளாக மாற்றியுள்ளது. இந்த தீர்ப்பாயத்தில் அர்த்தமற்ற முறையில் போடப்பட்ட தடையை நீக்க வாதிடுவோம்.
ஏழு தமிழர்கள் விடுதலைக்கு தமிழ்நாடு அரசு மத்திய அரசிற்கு அழுத்தம் தரவேண்டும். மத்திய அரசு ஏழு தமிழர்கள் விவகாரத்தில் துரோகம் இழைக்கிறது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: எழுவர் விடுதலை குறித்து அரசின் தீர்மானத்தை நிராகரித்த ஆளுநர்!