மதுரை வைகை ஆற்றின் இரு கரைகளிலும் சாலை அமைக்கும் பணி, ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோன்று பெத்தானியாபுரம் பகுதியை ஒட்டிய வைகை ஆற்று பாலம் கீழ்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை திட்டம் சார்பாக சாலைகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இதன் ஒருபகுதியாக சாலைகள் அமைப்பதற்கு, காங்கிரீட் கலவை இயந்திரத்துடன் கூடிய லாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில், நேற்று (அக்.16) மாலை கான்கிரீட் கலவை கொண்டு வந்த லாரி திடீரென பணிகள் நடைபெற்றுவரும் பகுதியில் தோண்டப்பட்டிருந்த 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் விருதுநகரைச் சேர்ந்த மாரீஸ்வரன் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்தில் மானா மதுரையைச் சேர்ந்த லாரி டிரைவர் தாளமுத்து, உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்ததைக் கண்ட அப்பகுதியினர், காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு, காவல்துறையினர் தாளமுத்துவை மீட்டு மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இவ்விபத்து தொடர்பாக கரிமேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை: தடைவிதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு