மதுரை: போக்குவரத்து புலனாய்வுத் துறையில் பணியாற்றும் தலைமைக் காவலர் ஒருவர், மதுரை அருகே விபத்தில் சிக்கி உயிரிழந்தார். பதறவைக்கும் அந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகரன் (42). போக்குவரத்து புலனாய்வுத் துறையில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று மதியம் சின்ன உடைப்பு பகுதியில் நடந்த விபத்து குறித்து விசாரணை நடத்த இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மண்டேலா நகரிலிருந்து மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் நிலைதடுமாறி சாலை தடுப்பில் மோதி கீழே விழுந்தார்.
மதுரையிலிருந்து வந்து கொண்டிருந்த அரசு பேருந்தின் முன் சக்கரம் அவர் மீது ஏறியதில் பலத்த காயம் அடைந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை மீட்டு அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க: மகன் இறந்த துக்கத்திலும் இளைஞனுக்கு உதவிய எம்எல்ஏ