மதுரை: சட்டவிரோத மதுவிற்பனை, லாட்டரி மற்றும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்யும் பெட்டிக்கடைகள் மீதும், விற்பனை செய்பவர்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் 24 மணி நேரமும் மதுபானம், கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களும், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களும் சாதாரணமாகக் கிடைக்கின்றன. குறிப்பாக பெட்டிக்கடைகளில் சட்ட விரோதமாகவும், காட்டு பகுதிகளிலும் இதுபோன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
வத்திப்பட்டி, லிங்கவாடி, செந்துறை, கொசுக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பெட்டிக்கடைகள் மூலமாக சர்வ சாதாரணமாக கஞ்சா, குட்கா, மதுபானம் மற்றும் சட்டவிரோத லாட்டரி விற்கப்படுகின்றன. இந்தப் பகுதிகளில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த நிலையில், இங்குள்ள பள்ளிக் கல்லூரி மாணவர்களை குறிவைத்தும் இந்த போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
எனவே நத்தம் தாலுகா மற்றும் புறநகர் பகுதிகளில் சட்டவிரோத மதுவிற்பனை, லாட்டரி, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்யும் பெட்டிக்கடைகள் மீதும், விற்பனை செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து, இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வில் இன்று (ஜன.8) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், "காவல்துறை சார்பில் 24 மணிநேரமும் தனிப்படை அமைத்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பெரிய அளவில் கஞ்சா, குட்கா, புகையிலை பொருட்கள் பிடிக்கப்பட்டுள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், "பெட்டிக்கடைகளில் சட்டவிரோத மதுபானம், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும். போதைப் பொருட்கள் மற்றும் சட்டவிரோத லாட்டரி விற்கும் பெட்டிக் கடைகளைக் கண்டறிந்த உடனேயே, சீல் வைத்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறினர்.
தொடர்ந்து, புகாருக்கு உள்ளாகும் பெட்டிக்கடைகள் மீது எடுக்கப்படும் சட்ட நடவடிக்கை என்ன? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுபோன்ற குற்றங்களைக் குறைக்க காவல்துறை மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகள் மற்றும் இதுவரை எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் காவல்துறை தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: சொத்து தகராறில் தாயை நண்பருடன் சேர்ந்து வெட்டிக் கொன்ற மகன்.. தூத்துக்குடியில் பரபரப்பு!