மதுரையை சேர்ந்த புஷ்பவனம் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தமிழ்நாட்டில் டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைகழகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 14 அரசு சட்ட கல்லூரிகள், 2 தனியார் சட்ட கல்லூரிகள் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் ,உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். தேசிய சட்ட கல்லூரிகளில் உள்ளது போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
மின்புத்தகம் வழங்குவதற்கும், ஒவ்வொரு மாணவருக்கும் தனி தனி ID , ரகசிய எண் மற்றும் அடையாளம் வழங்க உத்தரவிட வேண்டும். மின்புத்தகம் மற்றும் மின் இதழ், சட்ட இதழ்கள் சமீபத்திய உத்தரவுகளை ஆன் லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஸ்மார்ட் கிளாஸ் ரூம் மேம்படுத்தி இதற்காக பயிற்சி அளிக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு வழிகாட்டும் மையத்தை ஏற்படுத்த வேண்டும். சட்டக்கல்லூரி வளாகத்தில் வைபை வசதி ஏற்படுத்த வேண்டும். நவீன நூலகம், நவீன மின்னணு நூலகத்தை உருவாக்க வேண்டும். மேலும் அரசு சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும் , விடுதி வசதிகளை ஏற்படுத்தி மாணவர்களுக்கு மெஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்" என்று மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனு தாரரின் கோரிக்கை குறித்து, தமிழ்நாடு அரசு பரிசீலிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.