மதுரை: கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணதாசன், திரு.வி.க, அலமேலு உட்பட 8 மாவட்ட ஊராட்சிக் குழு கவுன்சிலர்கள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதில், "நாங்கள் 8 நபர்களும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு கவுன்சிலர்களாக இருந்து வருகிறோம். கரூர் மாவட்ட ஊராட்சிக்குழுவிற்கு துணைத்தலைவர் தேர்ந்தெடுப்பதற்காக, அக்டோபர் 22ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும் எனத்தேர்தல் அலுவலர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
திமுக கலகம்
அக்டோபர் 22ஆம் தேதி மதியம் கரூர் மாவட்டத்தில் உள்ள 12 மாவட்ட ஊராட்சிக் குழு கவுன்சிலர்கள் அனைவரும் மினிட் புக்கில் கையெழுத்து இட்டோம். பின் அதிமுகவைச் சேர்ந்த 8 மாவட்ட ஊராட்சிக்குழு கவுன்சிலர்கள் திரு.வி.க என்பவருக்கு ஆதரவாக வேட்பு மனுவை நிரப்பி, தேர்தல் அலுவலரிடம் கொடுத்தோம். திமுகவைச் சேர்ந்த 4 மாவட்ட ஊராட்சிக் குழு கவுன்சிலர்கள் தேர்தல் நடத்தக்கூடாது என கலகம் செய்தனர். உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர் தேர்தலை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.
எனவே, கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலை நேர்மையாக நியாயமாக நடத்துவதற்கு, தேர்தலை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும். மேலும் ஓய்வு பெற்ற நீதிபதியை தேர்தல் நடத்தும் அலுவலராக நியமித்து, தேர்தலை விரைவாக நடத்த வேண்டும்" எனக் கூறியிருந்தனர்.
மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை
இந்த மனு நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் எந்த தேதியில் நடத்தப்படவுள்ளது எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அரசு தரப்பில், தமிழ்நாடு முழுவதும் மறைமுகத்தேர்தல் நடத்தப்படாமல் இருக்கும் இடங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை அளிக்க உள்ளதாகவும்; அதன் பேரில் விரைவாகத் தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
தலைமைத் தேர்தல் அலுவலர் பதிலளிக்க உத்தரவு
இதனையடுத்து நீதிபதிகள் கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலை நடத்துவது குறித்து தலைமைத் தேர்தல் அலுவலர், கரூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்குப் பிடிவாரண்ட்!