மதுரை: திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த செந்தில்குமார் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், "பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தமிழகத்திலேயே மிகவும் வருமானம் அதிகமாக ஈட்டி தரக்கூடிய கோயில் ஆகும்.
இந்த கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும், இந்த கோவிலில் பிரசாதமான விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்தம் உலகப் பிரசித்தி பெற்றதாகும். இதுமட்டும் அல்லாது, சாதாரண நாட்களில் 10 இடங்களிலும், விசேஷ காலங்களில் 13 இடங்களிலும் திருக்கோயிலின் சார்பாக விற்பனை நிலையங்கள் மூலம் இந்த பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த கடைகளில் விற்பனையாளர்கள் கோயில் நிர்வாகத்தால் டெண்டர் விடப்பட்டு அதன் மூலம் தேர்வு செய்யப்பட்ட நபர்களே விற்பனை செய்கிறார்கள். மிகவும் விசித்திரமான நடைமுறை இந்த கோயிலில் மட்டும் தான் நடைபெறுகிறது.
இங்கே வாங்கப்படும் பஞ்சாமிர்தத்திற்கு எவ்வித ரசீதும் தரப்படமாட்டாது. இதைச் சாதகமாகப் பயன்படுத்தி விற்பனையாளர்கள் விலையை ஏற்றியும் அளவு குறைவாகவும் வழங்குகின்றனர். இதுகுறித்து கேள்வி எழுப்பினால், பக்தர்களுடன் வாக்குவாதம் செய்கின்றனர். கேரளா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களிலிருந்து வரும் பக்தர்கள் இதனால் மனவேதனை அடைகின்றனர்.
பழனியை விட அதிகமாகக் கூட்டம் கூடும் கேரளாவின் ஐயப்பன் கோயிலிலும், ஆந்திராவின் திருமலை திருப்பதியிலும் கோயில் பிரசாதங்கள் முறையாக ரசீது கொடுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. ஆனால், பழனியில் மட்டும் ரசீது கொடுக்க மறுக்கப்படுகிறது.
பலமுறை இது குறித்து இணை ஆணையாளரிடம் புகார் செய்தும் எவ்வித பலனும் இல்லை. எனவே, திருக்கோயில் மூலமாக விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்தத்திற்கு முறையான ரசீது வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் சக்திவேல் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, தமிழகத்தில் அனைத்து கோயில்களிலும் வழங்கப்படும் பிரசாதங்களுக்கு கம்ப்யூட்டர் முறையில் ரசீது வழங்கப்பட்டு வருகிறது. இதே போலப் பழனி முருகன் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்திற்கும் ரசீது கொடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், பழனி முருகன் கோயிலில் பிரசாதமாக விற்பனை செய்யப்படும் பிரசாதங்களுக்கு முறையான ரசீது வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: பாஜக-விற்கு இணங்காத மாநிலங்களைப் பிடிக்க இதுதான் திட்டம்.. ஜம்மு & காஷ்மீர் தீர்ப்பே உதாரணம் - உ.வாசுகி குற்றச்சாட்டு!