மதுரை: உசிலம்பட்டி தாலுகா சீமானூத்து கிராமத்தில் பிப்ரவரி 12ஆம் தேதி கிடாமுட்டு போட்டி நடத்த அனுமதி வழங்க கோரி கிடாமுட்டுவோர் சங்க செயலாளர் கணேசன் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், "உசிலம்பட்டி தாலுகா சீமானூத்து கிராமத்தில் ஸ்ரீனிவாசபெருமாள் மற்றும் தோப்பு கருப்பசாமி கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் திருவிழாவை முன்னிட்டு கிடாமுட்டு போட்டி என்ற கலாச்சார நிகழ்ச்சி நடத்தப்படும்.
இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு பிப்ரவரி 12ஆம் தேதி கிடாமுட்டு போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு அனுமதி கோரி காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளோம். இன்னும் அனுமதி தரவில்லை. மனு நிலுவையில் உள்ளது. எனவே, உசிலம்பட்டி தாலுகா சீமானூத்து கிராமத்தில் பிப்ரவரி 12ஆம் தேதி கிடாமுட்டு போட்டி நடத்த அனுமதி வழங்குமாறு காவல் துறையினருக்கு உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், உசிலம்பட்டி பகுதியின் பாரம்பரிய கலாச்சார போட்டியான கிடாமுட்டு போட்டி பல ஆண்டுகளாக நடக்கிறது. கடந்தாண்டும் எந்தவித இடையூறின்றி நடந்தது. கலாச்சார நிகழ்வுக்கு அனுமதி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், கிடாமுட்டு போட்டிக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக உசிலம்பட்டி டிஎஸ்பி, பிப்ரவரி 11ஆம் தேதிக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: நெல்லை பல்கலை மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க துணைவேந்தர் உத்தரவு