மதுரை: தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சேர்ந்த சுசிகுமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், "மதுரை அழகர்கோவில் மலை உச்சியில் ஸ்ரீ ராமதேவர் சித்தரின் ஜீவசமாதி உள்ளது. இந்த ராமதேவர் சித்தரின் ஜீவசமாதிக்கு செல்ல அழகர் கோயில் பழமுதிர்சோலை இல் அமைந்துள்ள நோபரா கங்கை தாண்டி மலை மேல் 2.5 கிலோ மீட்டர் செல்ல வேண்டும்.
இந்த சித்தரின் ஜீவ சமாதியை பக்தர்கள், பொது மக்கள், அருகிலுள்ள கிராம மக்கள் வழிபாடு செய்து வந்தனர். குறிப்பாக அமாவாசை, பௌர்ணமி மற்றும் பூரம் நட்சத்திரம் போன்ற நாளில் பல பக்தர்கள் ஸ்ரீ ராமதேவர் சித்தரின் ஜீவ சமாதிக்கு யாத்திரையாக சென்று வழிபாடு செய்வது வழக்கம். கரோனா தொற்று கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு ராக்காயி அம்மன் கோயில் அருகே பலர் கடைகள் அமைத்து சிகரெட் போன்ற பொருட்கள் விற்கத் தொடங்கியுள்ளனர்.
மேலும் ஸ்ரீ ராமதேவர் சித்தரின் ஜீவ சமாதிக்குச் செல்லும் பக்தர்களைத் தடுத்து மிரட்டி வருகின்றனர். இவர்கள் இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் என்பதால் ஸ்ரீ ராமதேவர் சித்தரின் ஜீவ சமாதிக்குச் செல்ல பத்துக்கும் மேற்பட்ட வழிகள் வைத்துள்ளனர். இதனால் ஸ்ரீ ராமதேவர் சித்தரின் ஜீவ சமாதிக்குச் செல்லும் பக்தர்களிடம் பணம் பெற்றுக் கூட்டிச் செல்கின்றனர். இது குறித்துச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே, ஸ்ரீ ராமதேவர் சித்தரின் ஜீவ சமாதிக்கு செல்ல அனுமதி அளிக்க வேண்டும் குறிப்பாக அமாவாசை, பெளர்ணமி மற்றும் பூரம் நட்சத்திரம் போன்ற நாட்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று (மார்ச்.8) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ஸ்ரீ ராமதேவர் சித்தரின் ஜீவ சமாதி காட்டுப் பகுதியில் அமைந்திருப்பதால் மனுதாரர் கோரிக்கை குறித்து மதுரை மாவட்ட வன அலுவலர் பரிசீலனை செய்து 8 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் முருகன் கோயில் பங்குனி விழா - கொடியேற்றத்துடன் தொடக்கம்