மதுரை: தென்காசியைச் சேர்ந்த சைலப்ப கல்யாண் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், " 100 விழுக்காடு வாக்குப்பதிவு என்பதை இலக்காகக் கொண்டு தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. ஆனால், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாதது, ஒருவரின் பெயரே 2 முறை இடம்பெற்றிருப்பது போன்ற பிரச்சினைகளால் சரியான எண்ணிக்கையுடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவது இல்லை.
வாக்காளர்கள் பெரும்பாலும் தங்களின் பெயர் இருப்பதை பூத் ஏஜெண்டுகள் மூலமாக உறுதிப் படுத்திக் கொள்கின்றனர். இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாதது, ஒருவரின் பெயரே இரு முறை பதிவாகி இருப்பது போன்றவை, அந்த வாக்கை தவறாக பயன்படுத்துவதற்கும், 100 விழுக்காடு வாக்குப்பதிவு என்பது இயலாமல் போவதற்கும் காரணமாக அமைந்து விடுகின்றன.
2021 ஜனவரி 20ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலிலும் இந்த திருத்தங்கள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதிப்படுத்த இறந்தவர்களின் பெயர்களை நீக்கவும், இரு முறை பதிவு செய்யப்பட்ட பெயர்களை நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, ஜனவரி 20ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை ரத்து செய்து திருத்தங்களை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்விற்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: சாலை அமைக்க நிலம் கையப்படுத்தல் வழக்கு: நெல்லை ஆட்சியர் விளக்கம் அளிக்க உத்தரவு