மதுரை: புதிய மாகாளிப்பட்டியைச் சேர்ந்த மணிபாரதி, உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், 'மதுரை வண்டியூர் கண்மாய் 575 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தற்போது ஆக்கிரமிப்புகள் காரணமாக கண்மாய் 400 ஏக்கராக சுருங்கிவிட்டது. இந்த கண்மாய்க்கு 3 ஆயிரம் பறவைகள் வந்து செல்கின்றன.
கே.கே.நகர், மேலமடை, கோமதிபுரம், பாண்டிகோவில், கருப்பாயூரணி, யாகப்பா நகர், மாட்டுத்தாவணி, லேக்வியூ மற்றும் வண்டியூர் பகுதிகளின் நிலத்தடி நீர் மட்டம் வண்டியூர் கண்மாயை சார்ந்துள்ளது. வண்டியூர் கண்மாயை சரியாக பராமரிப்பு இல்லாததால் வண்டியூர் கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கண்மாயை ஆழப்படுத்தி பராமரிக்கக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
அண்மையில் வண்டியூர் கண்மாயை பராமரிக்க மாநகராட்சி ரூ.5 கோடி நிதி ஒதுக்கியது. இந்நிலையில் மதுரை அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து கோமதிபுரம் பெட்ரோல் நிலையம் வரை 2.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.150.28 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணியை தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை தொடங்கியுள்ளது.
தென்கால் கண்மாயில் விளாச்சேரி மெயின் ரோட்டில் இருந்து மதுரை - திருமங்கலம் பிரதான சாலை வரை மேம்பாலம் கட்டப்படுகிறது. எனவே வண்டியூர், தென்கால் கண்மாயில் மேம்பாலம் கட்ட தடை விதிக்க வேண்டும்' என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையில் கண்மாய்களில் மேம்பாலம் கட்ட தடை விதிப்பதாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறினார். இதற்கு நீதிபதி பி.புகழேந்தி சம்மதிக்கவில்லை. இதையடுத்து இந்த மனு மீதான விசாரணையை தலைமை நீதிபதிக்கு அனுப்ப பதிவுத்துறைக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான அவரது உத்தரவில், 'மதுரை கடந்த 50 ஆண்டுகளில் ஏராளமான நீர் நிலைகளை இழந்துள்ளது. அவனியாபுரம் இருப்பது நீர் நிலையில் தான். அங்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டியுள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உலகநேரி கண்மாயில் கட்டப்பட்டுள்ளது. இயற்கை ஒவ்வொரு முறையும் பாடங்களை கற்றுக்கொடுத்த போதும், நாம் இன்னும் பாடம் கற்பிக்கவில்லை.
நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும். சாலை அமைப்பதற்காக வண்டியூர் கண்மாய் போதுமான அளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வண்டியூர், தென்கால் கண்மாய்களில் மேம்பாலம் கட்டுவதற்கு இடைக்கால தடை விதிக்கிறேன். சக நீதிபதி புகழேந்தி அதை ஏற்காததால் எதிர்மனுதாரர்கள் பதில் மனு தாக்கல் செய்த பிறகு பிரதான மனுவை பதிவுத்துறை தலைமை நீதிபதிக்கு அனுப்ப வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1 கோடிக்கு மேல் வசூல்..! பெளர்ணமி நிலவில் வைகை நதிக்கு மஹா ஆரத்தி..!