மதுரை: அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சிவகங்கையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க நேற்று காலை 11 மணிக்குச் சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் சென்றார்.
எடப்பாடி பழனிச்சாமி விமானத்திலிருந்து இறங்கி விமான நிலைய ஓடுதளத்திலிருந்து வெளியே வரும் வாகனத்தில் பயணம் செய்த போது, அவருடன் பயணித்த சிங்கம்புணரியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் எடப்பாடி பயணிப்பதாகக் கூறி நேரலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அவர் நேரலையில், "திடீரென எதிர்க்கட்சித் தலைவர் துரோகத்தின் அடையாளம் அண்ணன் எடப்பாடி உடன் பயணம் செய்கிறேன் என பேசியவர். தொடர்ந்து எடப்பாடியார் துரோகத்தின் அடையாளம், சசிகலாவிற்குத் துரோகம் செய்தவர். 10.5% இடஒதுக்கீட்டை தென்னாட்டு மக்களுக்கு எதிராகக் கொடுத்தவர்" எனவும் கூறினார்.
இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாவலர் அவரை தடுத்து நிறுத்தினார். எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகக் கோஷமிட்டவர் சிங்கப்பூரிலிருந்து திரும்பியவர் என்பதும், அவர் அமமுக கட்சி ஆதரவாளர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த இளைஞர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தற்போது அவனியாபுரம் காவல் நிலையத்தில் அமமுக நிர்வாகி ராஜஷ் மீது இரு பிரிவுகளின் 341, 294 கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் எடப்பாடி பழனிச்சாமி, சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் மணிகண்டன், கிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் மகன் ஆகிய 5 பேர் மீது கொலை முயற்சி, தாக்குதல் செல்போன் பறிப்பு, காயம் ஏற்படும் வகையில் கொடூரம் தாக்குதல் ஆகிய (341, 294, 323, 392, 506,109) 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வடமாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறு பேச்சு - சீமான் மீது வழக்குப்பதிவு!