குமரி மாவட்டம், குளச்சலை சேர்ந்த அந்தோணி முத்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில்,'கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் வரம்பில்லாமல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான கல்விக் கட்டண குழு ஒவ்வொரு வகுப்பிற்கும் வசூலிக்க வேண்டிய கட்டணத்தை நிர்ணயம் செய்துவருகிறது.
இந்த கல்விக் கட்டண விபரம் கல்வி ஆண்டின் தொடக்கத்தில் இணையதளத்திலும், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் அறிவிப்பு பலகையிலும் வெளியிடப்படுவதில்லை. இதனால், கல்விக் கட்டண விபரம் தெரியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
இதை பயன்படுத்திக் கொள்ளும் மெட்ரிக் பள்ளிகளில் இஷ்டம்போல் கட்டணங்களை வசூலிக்கின்றன. எனவே, தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல் செய்வதை தடுக்கும் வகையில் நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டண விபரங்களை கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே வகுப்பு வாரியாக இணையதளத்திலும், பள்ளி அறிவிப்பு பலகையில் வெளியிடவும், கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும் உத்தரவிட வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், தாரணி அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கில் விரிவான உத்தரவு பிறப்பிப்பதாகத் தெரிவித்தனர்.