மதுரை: தமிழ்நாட்டில் நவோதயா வித்யாலயா பள்ளி திட்டத்தை ஏற்கவும், அதற்கான வசதிகளை ஏற்படுத்தி தரவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி, மதுரை அண்ணா நகரை சேர்ந்த முகமது ரஸ்வி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார்.
அதில், "ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் மத்திய அரசால் செயல்படுத்தப்படும் மிகப்பெரும் கல்வித் திட்டம். ஆண்டுக்கு 200 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் இல்லை.
நவோதயா வித்யாலயா பள்ளி திட்டம்
தமிழ்நாடு அரசியல் தலைவர்கள், அரசின் கொள்கை முடிவு என கூறி இந்தத் திட்டத்தை ஏற்க மறுத்து வருகின்றனர். இதன் காரணமாக பல ஏழை குழந்தைகள் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் செலுத்தி கல்வியை பெற வேண்டிய நிலை உள்ளது.
நவோதயா பள்ளிகளுக்கென மத்திய அரசு 20 கோடி ரூபாயை ஒதுக்கும் நிலையில், மாநில அரசு நிலத்தை மட்டும் ஒதுக்கி, ஒன்றிய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். ஆகவே தமிழ்நாட்டில் நவோதயா வித்யாலயா பள்ளி திட்டத்தை ஏற்கவும், அதற்கான வசதிகளை ஏற்படுத்தி தரவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
பலர் பயனடையும் திட்டம்
இந்த வழக்கு நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், "நவோதயா வித்யாலயா பள்ளிகள் தொடர்பான முடிவு அரசின் கொள்கை முடிவு. அரசே இதுகுறித்து முடிவு செய்ய வேண்டும். மனுதாரர் விளம்பர நோக்கில் இந்த வழக்கை பதிவு செய்துள்ளார்" என தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து மனுதாரர் தரப்பில், "நவோதயா வித்யாலயா பள்ளி தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்டால் பள்ளிக் கட்டணம் செலுத்த சிரமத்திற்குள்ளாகும் நான் உள்பட பலரும் பயனடைவோம்" என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் வழக்கு குறித்து ஒன்றிய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை எட்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: தமிழ் மொழிப்பாடம் கட்டாயம்... டிஎன்பிஎஸ்சி தேர்வில் புதிய விதிகள் அறிமுகம்!