மதுரை: குமரி மாவட்டம் இரையுமன்துறை மீனவ கிராமத்தில் படகு இறங்கு தள விரிவாக்கத்திற்கு, மீன் தொழில் செய்யும் இடத்தை கையகப்படுத்த தடை விதிக்க வேண்டும் என மீனவர்கள் கோரிய வழக்கில், குமரி மாவட்ட ஆட்சியர், மீன் வளத்துறை உதவி இயக்குநர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது.
குமரி மாவட்டம் இரையுமன்துறை அந்தோணி என்பவர் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,
இரையுமன்துறை வலைத்தொழில் தொழிலை மையமாக வைத்து வாழ்ந்து வரும் கிராமம். இதன் கிழக்கு எல்லையில் தேங்காய்பட்டணம் பகுதியில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மறுமுனையில் அமைந்துள்ள இரையுமன்துறை கிராமத்தில் இறங்குதள கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .
இரையுமன்துறை மீனவ கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மீனவ மக்கள் குடியிருப்புகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு காலங்காலமாக கடலையும் அதன் கரையையும் நம்பி வாழும் எங்கள் மக்கள் இந்த பகுதியில் உள்ளனர்.
இரையுமன்துறை மக்கள் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் நிலலங்கள் ,மீன்வளத்துறையிடம் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரின் நடைமுறை ஆணை தெரிவிக்கிறது. அனைத்து மக்களிடம் எவ்வித கருத்துக்கேட்பும் நடத்தாமல் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இரையுமன்துறை பகுதியின் கட்டமைக்கப்பட்டிருக்கும் மீன் இறங்குதளம் விரிவாக்கத்திற்கு அந்த பகுதியிலிருந்து 400 மீட்டர் நிலம் கையகப்படுத்தி அந்த இடத்தில் தள ஆய்விற்கான பணிகளை குமரி மாவட்ட மீன்வளத்துறை செய்ய முன் வந்துள்ளது. தற்போது அரசால் படகு இறங்குதள விரிவாக்கத்திற்கு கையகப்படுத்தப்பட்டுள்ள நிலமானது ஆண்டாண்டு காலமாக இரையுமன்துறை மீனவர்கள் மீன் தொழில் செய்யும் பகுதியாகும். எனவே இறங்குதள விரிவாக்கத்திற்கு மீனவர்கள் மீன் தொழில் செய்யும் இடத்தை கையகப்படுத்த தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி துரை சாமி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இது குறித்து குமரி மாவட்ட ஆட்சியர், மீன்வளத்துறை உதவி இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: கே.டி. ராகவன் விவகாரம் - என்ன நடக்கிறது பாஜகவில்?