மதுரை: ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த தீரன் என்ற திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், "மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்படும் KVPY (Kishore Vaigyanik Protsahan Yojna) இளம் விஞ்ஞானிகள் ஊக்கத் திட்டத்துக்கான தேர்வு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. 11ஆம் வகுப்பு முதல் இளங்கலை முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள், இந்த அடிப்படை அறிவியல் ஆராய்ச்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள், முனைவர் படிப்புக்கு செல்லும் வரை, அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ. 7 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
இந்த தேர்வு, தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும். தாய்மொழியில் கல்வி கற்பதாலேயே, மாணவர்கள் எளிதில் அறிவியல் உள்ளிட்ட அம்சங்களை புரிந்துகொள்ள முடியும். இந்த தேர்வுக்கு தமிழ்நாட்டை காட்டிலும், கேராளாவில் அதிக தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இது போன்ற காரணங்களால், அறிவியல் ஆர்வம் கொண்ட , அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவர். எனவே, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்படும் KVPY தேர்வை, இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகள் மட்டும் அல்லாமல், தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை செயலாளர், அதன் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படுமா மதுரை?