தாய்லாந்து நாட்டை சேர்ந்த எட்டு பேர் இந்தியாவிற்கு சுற்றுலா விசா மூலம் கடந்த மார்ச் மாதம் வந்துள்ளனர். மேலும் அவர்களது சுற்றுலா வழிகாட்டியாக மதுரை, திண்டுக்கல்லைச் சேர்ந்த இரண்டு நபர்கள் சென்றுள்ளனர்.
இந்நிலையில் மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள மாலைபட்டி கிராமத்தில் உள்ள பள்ளிவாசலில் கடந்த சில நாட்களாக அந்த எட்டு பேரும் தங்கியிருந்தது காவல் துறையினருக்கு தெரிய வந்தது, பின்னர் அவர்களை விசாரித்ததில் வருகிற 31ஆம் தேதி மீண்டும் தாய்லாந்து திரும்பச் செல்ல விமான டிக்கெட் எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.
அந்த எட்டு பேரில் இரண்டு பேருக்கு இருமல், காய்ச்சல் பாதிப்பு உள்ளதாகவும், மற்றொருவர் உடல் நல குறைவாக உள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் இருவருக்கும் கரோனா தொற்று இருக்கிறதா என்று செய்யப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, எட்டு பேரும் மதுரை ஆஸ்டின்பட்டி பகுதியில் உள்ள மருத்துவக் கண்காணிப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் இதுபோன்று இவர்கள் ஒவ்வொரு மசூதியாக தங்கி மத பரப்புரை செய்துள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து அவர்கள் விதிகளை மீறி பரப்புரை செய்ததற்காகவும், 144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கும் சூழலில், நோய் பரவும் என்று தெரிந்தே பல்வேறு இடங்களுக்கு சென்றதற்காக இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.