மதுரை: திண்டுக்கல் மாவட்டம் நெய்க்காரப்பட்டியை சேர்ந்த அசோக்குமார், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா பெரியம்மாபட்டியில் நூற்றுக்கணக்கான உபரி நிலங்கள் உள்ளன. விவசாயத்துக்கு ஏற்ற இந்த நிலங்களை ஏழைகளுக்கு அரசு வழங்கயிருக்கலாம். அரசுக்கு சொந்தமான இந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் உபரி நிலங்களை அலுவலர்கள் முறையாக பராமரித்து பாதுகாக்கவில்லை.
இதனால் அரசியல்வாதிகளின் துணையுடன் தனிநபர்கள் அந்த நிலத்திலிருந்து மண் அள்ளி கடத்தி, அதிலிருந்து செங்கல் தயாரிக்கின்றனர். இங்கிருந்து மண் கடத்துவது குறித்து பொதுமக்கள் அலுவலர்களிடம் புகார் செய்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் கடந்த மாதம் மண் ஏற்றிச்சென்ற லாரிகளை பொதுமக்கள் பிடித்து வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். ஆனாலும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உரிமையாளர்களிடம் லாரிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்யவில்லை.
அரசு நிலங்களிலிருந்து மண் எடுத்து கடத்துவதால் பல கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பழனி தாலுகாவில் உள்ள உபரி நிலங்களில் மண் எடுக்க தடை விதிக்க வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கு குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: 'மத சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும்' - மனித உரிமை ஆணையம்