மதுரை: மேலூரை சேர்ந்த கள்ளர் பண்பாட்டு மைய தலைவர் கலைமணியம்பலம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "இயக்குநர் சந்திரா பாய் தயாரிப்பில் கரு பழனியப்பன் நடிக்கும் திரைப்படத்திற்கு ‘கள்ளன்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
18ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய சமூகத்தை சேர்ந்தவர்கள் கள்ளர் சமூகத்தினர். தமிழ்நாடு முழுவதும் சுமார் 40 லட்சம் மக்கள் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றனர். தமிழ்நாடு அரசின் ஆவணங்களில் ‘கள்ளன்’ என்றிருந்த பெயர் பின்னர் ‘கள்ளர்’ என திருத்தி அமைக்கப்பட்டது.
அந்தப் பெயரிலேயே தமிழ்நாடு அரசு சாதி சான்றிதழையும் வழங்கி வருகிறது. ‘கள்ளன்’ எனும் பெயரில் எடுக்கப்படும் திரைப்படம், கொள்ளை கூட்ட செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு படமாக்கப்பட்டுள்ளது. இது கள்ளர் சமூகத்தின் பெயரை களங்கப்படுத்தும் வகையிலும், அந்தச் சமூகத்தைச் சார்ந்த மக்களுக்கு மன உளைச்சலையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளது.
கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் திருட்டு உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவது போல காண்பிக்கப்படுகிறது. இதுபோல குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை திரைப்படத்திற்கு பயன்படுத்துவது சட்ட ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆகவே, ‘கள்ளன்’ பெயரில் திரைப்படத்தை வெளியிட தடை விதித்தும் அதன் தயாரிப்பாளர், இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், “படம் இதே பெயரில் வெளியானால் சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. படம் 18ஆம் தேதி வெளியாகவுள்ளதால் படத்தின் பெயரை மாற்ற உத்தரவிட வேண்டும்” எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
வழக்கு குறித்து தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை செயலர், தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் மண்டல இயக்குநர், தமிழ்நாடு காவல் துறை தலைவர், படத்தில் தயாரிப்பாளர் மதியழகன், இயக்குநர் சந்திர பாய் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணை மார்ச் 17ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க: 'மாமன்னன்' படப்பிடிப்பில் இணைந்த வடிவேலு!