மதுரை எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்திற்குட்பட்ட மேலக்கால் வழியாக மதுரைக்கு கஞ்சா, குட்கா பொருட்களை காய்கறிகளை ஏற்றி வரும் சரக்கு வாகனத்தில் கடத்தி கொண்டு வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து எஸ்.எஸ்.காலனி காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை காவல்துறையினர் சோதனையிட்டனர். அப்போது சரக்கு வாகன ஓட்டுநர் தப்பியோடி விட்டார். இதனையடுத்து வாகனத்தில் இருந்த இருவரிடம் காவல்துறையினர் விசாரனை செய்தபோது அவர்கள், பாரத் தீபக், கார்த்திக் என்பது தெரியவந்தது. மேலும் தப்பியோடிய ஓட்டுநரின் பெயர் கார்த்திக் பாண்டி என்பது தெரிந்தது.
அதன் பின் வாகனத்தில் இருந்த காய்கறி மூட்டைகளை காவல்துறையினர் சோதனை செய்தனர். முட்டைக்கோஸ் இருந்த மூன்று மூட்டைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களும் மற்றொரு மூட்டையில் 3.950 கிலோ கஞ்சாவும் இருந்ததன.
அதனை பறிமுதல் செய்த காவல்துறையினர், பாரத் தீபக், கார்த்திக்கிடம் விசாரணை மேற்கொண்ட போது கஞ்சாவை ஆந்திராவிலும், குட்கா புகையிலைப்பொருட்களை பெங்களூரிலும் வாங்கியதாக தெரிவித்தனர். தொடர்ந்து காவல்துறையினர் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.தப்பியோடிய ஓட்டுநர் கார்த்திக் பாண்டியை தேடி வருகின்றனர்.