மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே அமைந்துள்ள கிராமம், குட்லாடம்பட்டி. இந்த கிராமத்திற்கு உள்பட்டப்பகுதியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் கடந்த 1998ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 100 வீடுகள் அமைந்துள்ள இக்குடியிருப்பில், பல்வேறு சமூகத்தைச் சார்ந்த மக்களும் வாழ்கின்றனர். இதற்கிடையில், சமத்துவபுரங்களில் உள்ள வீடுகளைப் புனரமைக்க கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.
இதன்படி, தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள 238 சமத்துவபுரங்களில் இருக்கும் 149 சமத்துவபுரங்களில் உள்ள 14,880 வீடுகளைப் புனரமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே அமைந்துள்ள குட்லாடம்பட்டி சமத்துவபுரத்திலுள்ள வீடுகளைச் சீரமைக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், அங்குள்ள வீடுகள் இடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அங்குள்ள வீடுகளில் மிகவும் பழமையான வீடுகளின் மேற்கூரைகள் இடிக்கப்பட்டன. இதனால் குடியிருப்புவாசிகள் போராட்டம் நடத்தத் தொடங்கினர். இந்நிலையில், ஜூன் 22ஆம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் உள்பட அலுவலர்கள் குட்லாடம்பட்டி சமத்துவபுர மக்களைச் சந்தித்து கருத்துகளைக் கேட்டனர்.
தற்காலிகமாக தங்குவதற்கு வசதியில்லாத நிலையில், அங்குள்ள வீடுகளைப்பகுதி பகுதியாகப் பிரித்து புனரமைக்க பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளையடுத்து, முதற்கட்டமாக 20 வீடுகளின் மேற்கூரைகள் இடிக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக சமத்துவபுர குடியிருப்புவாசியும் சிபிஎம் (எம்எல்) கட்சியின் அமைப்பாளருமான பாண்டியன் கூறுகையில், ”எங்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் தலைமையிலான அலுவலர்கள் அடங்கிய குழுவினர் உடனடியாக இங்கு வந்து எங்களிடம் கருத்துக்கேட்டனர்.
அவர்களிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளோம். அதனை ஏற்றுக்கொண்டு தேவையானதைச் செய்து தருவதாக உறுதியளித்துள்ளனர். அடுத்ததாக மழைக்காலம் வருகிற காரணத்தால், சீரமைக்கப்பட உள்ள வீடுகளின் மேற்கூரைகளை உடனடியாக சரி செய்து கொடுக்க வேண்டும்.
தற்காலிகமாக குடிசை அமைத்தோ அல்லது பொதுக்கூடங்களிலோ தங்கியுள்ள மக்களுக்கு பல்வேறு வசதிக்குறைபாடுகள் உள்ளன. பாம்பு, விஷப்பூச்சிகளின் தொல்லை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்த வீடுகள் அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் புனரமைத்துத் தர வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வளர்ப்புத்தந்தை: 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு!