மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செக்காணூரணியை அடுத்துள்ள மீனாட்சிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வைரமுருகன் - சௌமியா தம்பதி. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கடந்த இரண்டாம் தேதி குழந்தை உயிரிழந்ததாகக் கூறி பெற்றோர் குழந்தையை வீட்டின் அருகே புதைத்துள்ளனர்.
சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் காவல் துறையினரிடம் அளித்த தகவலின் பேரில், செக்கானூரணி காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் 30 நாள்களான பெண் சிசுவைப் பெற்றோர் கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து உசிலம்பட்டி வட்டாட்சியர் செந்தாமரை, டிஎஸ்பி ராஜா தலைமையிலான குழு குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டி எடுத்தனர். பின்னர் குழந்தையின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டது.
குழந்தையின் பெற்றோர், தாத்தா ஆகியோரைக் கைது செய்து விசாரணை நடத்தியதில், ஏற்கனவே பெண் குழந்தை உள்ள நிலையில், மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால் எருக்கம் பால் கொடுத்து கொலை செய்ததாகப் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: கொரியர் பார்சலில் ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்!