மதுரையில் பிரபல ரவுடியாக வலம் வருபவர் பிள்ளையார் கணேசன். சம்மட்டிபுரத்தைச் சேர்ந்த மற்றொரு ரவுடி சரத், இவரது கூட்டாளி ஆவார். மதுரை மாநகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் சரத் மீது கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதனால், காவல் துறையினரின் கண்களில் சிக்காமல் பதுங்கி வாழ்ந்து வந்த சரத்தைப் பிடிப்பதற்காக, மதுரை மாநகரக் காவல் துறையினர் சமயம் பார்த்து காத்திருந்து வந்தனர். இந்நிலையில் சம்மட்டிபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் சரத் பதுங்கி இருப்பதாகக் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்ததை அடுத்து, வீட்டைச் சுற்றி வளைத்து அவரைக் கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அதே சம்மட்டிபுரத்தைச் சேர்ந்த ரித்தீஸ் என்பவருடன் இணைந்து, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் பின்புறம் சரத் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்து வருவது தெரியவந்தது. இதனையடுத்து வெடிகுண்டு தடுப்பு வல்லுநர்களுடன் அப்பகுதியில் சோதனையிட்ட காவல் துறையினர், அங்கிருந்த நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றினர்.
சரத் தனது எதிரிகளை பழி வாங்குவதற்காக நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து வந்தாரா அல்லது வேறு ஏதேனும் நோக்கம் உண்டா என்பது குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். தனியார் பள்ளி ஒன்றின் பின்புறம் நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : நீ சரக்க மட்டும் குடு தல... நாங்க டோக்கன போடுறோம் எங்க ஸ்டைல்ல...