மதுரை: மதுரை பாஜக அலுவலகத்தில் மதுரை மாநகர மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மதுரை மாநகராட்சி தேர்தலில் பாஜக 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது, 9 வார்டுகளில் 2ஆம் இடத்தையும், 37 வார்டுகளில் 3ஆம் இடத்தையும் பிடித்துள்ளது, மதுரை மாநகராட்சி தேர்தலில் பாஜக 10 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது, முறைகேடுகள் செய்து திமுக வெற்றி பெற்றுள்ளது.
மாநகராட்சி தேர்தலில் 40 வார்டுகளில் நடைபெற்ற வாக்குப்பதிவில் முறைகேடு நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 5 முதல் 6 மணி வரையில் அதிக அளவில் வாக்குப்பதிவு நடந்துள்ளது. முறைகேடுகளாக நடைபெற்ற வாக்குப்பதிவு குறித்த விவரங்களைச் சேகரித்து மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அனுப்பி உள்ளோம்.
மாநிலத் தலைவர் அனுமதி அளித்தால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும். மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு இல்லை, மத்திய அரசின் திட்டங்களையே மாநில அரசு மக்களுக்கு வழங்குகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு பணநாயகம் வென்றுள்ளது.
அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பறிபோனது
2024இல் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் மதுரையில் போட்டியிடுவோம். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டதால் மதுரையில் 14 வார்டுகளில் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது, ஐஏஎஸ், ஐபிஎஸ்க்கு உள்ள நுழைவுத் தேர்வைப் போலவே நீட் தேர்வைப் பார்க்க வேண்டும், நீட் தேர்வுக்காகப் பள்ளிகளில் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க:ஜெயகுமார் ஜாமீன் மனு காவல்துறை பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு