இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சி.மகேந்திரன் எழுதிய 'அறிவு பற்றிய தமிழரின் அறிவு' எனும் நூல் வெளியீட்டு விழா மதுரை புத்தகத்திருவிழாவில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, 'தமிழர் தேசிய முன்னணி' அமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த நல்லகண்ணு," இந்தியா என்பது தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,வங்காளம் உள்ளிட்ட பலமொழிகள் பேசக்கூடிய நாடு. இப்படி மக்கள் பேசக்கூடிய மொழிகளை அரசியல் சாசனம் அங்கீகரித்துள்ளது. ஆனால் அந்த மொழிகளையெல்லாம் விட்டுவிட்டு சமஸ்கிருதம் தான் முதன்மையானது.
அதிலிருந்து தான் அனைத்து மொழிகளும் வந்தன என்று பொய்யான தகவலை மத்திய பாஜக அரசு பரப்பி வருவதோடு மட்டுமல்லாமல் அதை திணிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மேலும் இந்தியாவின் பன்மைத்துவத்தை குலைத்து ஒற்றை மொழி, ஒற்றை ஆட்சி, ஒற்றை கருத்து, ஒற்றை உணவு என இந்திய மக்களின் வாழ்க்கையில் ஒற்றைத்தன்மையை புகுத்துவதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது.
இந்து மதம் என்ற முறையிலும் வடமொழி என்ற முறையிலும் மாநில மொழிகள் புறக்கணிக்கப்படுகின்றன. அதிலும் தமிழ்மொழி அறவே புறக்கணிக்கப்படுகிறுது. எல்லா இடங்களிலும் இந்தி,சமஸ்கிருதம்,ஆங்கிலம் என புகுத்தி தமிழை புறக்கணிக்கிறார்கள். இந்திய மொழிகளிலேயே தொன்மையான மொழி தமிழ் மொழி அது அங்கீகரிக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்