மதுரையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. மதுரையின் முக்கியப் பகுதியான மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி உள்ள பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதிலும் ஆவணி மற்றும் மாசி வீதிகளில் சாலையின் இரு பக்கமும் நிறுத்தப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களால், பாதசாரிகளும் கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.
இதற்காக மதுரை மாநகராட்சி பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தபோதும், இப்பகுதியில் நிலவும் நெரிசலைத் தவிர்க்க முடியவில்லை. சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் மதுரை அம்மன் சன்னதி மற்றும் பெரியார் பேருந்து நிலையம் அருகே நவீன நான்கு சக்கர வாகன நிறுத்துமிடங்களை உருவாக்கி உள்ளது.
மேற்குறிப்பிட்ட வீதிகளில் அதிகமான வணிக நிறுவனங்கள் உள்ளன. அவர்களுக்கான வாகனங்களும் இப்பகுதியில் நிறுத்தப்படுவதுடன், மீனாட்சி கோயில் மற்றும் நகருக்குள் வருகை தருகின்ற பலரும் இப்பகுதிகளில் வாகனங்களை நிறுத்த நேரிடுகிறது.
இதனை கருத்தில்கொண்டு மதுரை மாநகராட்சி பொதுமக்கள் - தனியார் கூட்டுத் திட்டத்தின் அடிப்படையில், ஆங்காங்கே கட்டண வாகன நிறுத்துமிடங்களுக்கு ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளது. இதற்கான நெறிமுறைகள் மற்றும் நிர்வாக முறைகள் ஆகியவற்றை வெளியிட்டுள்ளதுடன், மேற்கண்ட ஆவணி மற்றும் மாசி வீதிகளில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடங்கள் குறித்தும், நிறுத்தக்கூடாத பகுதிகள் குறித்தும் அறிவிப்புப் பலகை வைக்க உள்ளது.
டிஜிட்டல் பதாகைகள் ஆங்காங்கே பொருத்தப்படவுள்ளன. இந்த டிஜிட்டல் பதாகைகள் மூலம் எந்தெந்த நிறுத்தும் இடங்களில் தற்போது காலியாக உள்ளன? எவை நிறைந்து காணப்படுகின்றன என்ற அறிவிப்புகள் வெளியாகும். வடக்காவணி மூலவீதியில் 25 இடங்களைக் கொண்ட 1 இருசக்கர மற்றும் 40 இடங்களைக் கொண்ட 1 இருசக்கர வாகன நிறுத்தும் இடமும், கீழ ஆவணி மூலவீதியில் 40 இடங்களைக் கொண்ட ஒரு இருசக்கர வாகன நிறுத்துமிடமும், தெற்காவணி மூல வீதியில் 500 இடங்களைக் கொண்ட ஒரு இருசக்கர வாகன நிறுத்துமிடமும், மேல ஆவணி மூல வீதியில் 30 இடங்களைக் கொண்ட 2 நான்கு சக்கர வாகன நிறுத்துமிடமும், 40 இடங்களைக் கொண்ட 1 இருசக்கர வாகன நிறுத்துமிடமும் உருவாக்கப்பட உள்ளது.
அதேபோல் மாசிவீதிகளைப் பொறுத்தவரை, வடக்குமாசி வீதியில் 7 கார் பார்க்கிங்கில் 56 இடங்களும், 6 பைக் பார்க்கிங்கில் 600 இடங்களும், கீழமாசி வீதியில் 3 கார் பார்க்கிங்கில் 24 இடங்களும், 4 பைக் பார்க்கிங்கில் 400 இடங்களும், தெற்குமாசி வீதியில் 6 கார் பார்க்கிங்கில் 46 இடங்களும், 6 பைக் பார்க்கிங்கில் 600 இடங்களும், மேலமாசி வீதியில் 6 கார் பார்க்கிங்கில் 46 இடங்களும் மற்றும் 6 பைக் பார்க்கிங்கில் 600 இடங்களும் உருவாக்கப்பட உள்ளன.
மேலும் இருசக்கர வாகனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.10 மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.25 என கட்டணம் வசூலிக்கப்படும். அதேபோல் மாதம் ஒன்றுக்கு இருசக்கர வாகனத்திற்கு ரூ.500, நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.2,000 எனவும், ஆண்டுக்கட்டணமாக முறையே ரூ.4,200, ரூ.16,800 என மதுரை மாநகராட்சி நிர்ணயம் செய்துள்ளது.
இதையும் படிங்க: சென்னை மாநகராட்சி உறுப்பினர்களுக்கும் வாகன பாஸ் அறிமுகம்