மதுரை: சிவகங்கை மாவட்டம் கீழடியில், தமிழ்நாடு அரசால் அகழாய்வில் கிடைத்த தொல்லியல் பொருட்களைக் காட்சிப்படுத்துவதற்கு நிரந்தர அகழ் வைப்பகம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த அகழ் வைப்பகம் 11 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் செட்டிநாடு கட்டடக் கலை பாணியில் உருவாக்கப்பட்டு வருகிறது.
மேலும் அருங்காட்சியகத்தின் உள்ளே பாரம்பரியமான ஆத்தங்குடி தரைத்தளக் கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது அதன் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தொல்லியல் பொருட்களைப் பாதுகாப்பாக காட்சிப்படுத்துவதற்கு ஏதுவான கண்ணாடிச் சட்டங்கள், மரச் சுவர்கள், பெட்டிகள் உள்ளிட்ட அறைக்கலன்களை அமைத்துத் தருவதற்கான ஒப்பந்தப்புள்ளியை தமிழ்நாடு பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.
ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கான விண்ணப்பத்திற்கு நாளை கடைசி நாள் எனவும், நாளை மறுநாள் ஒப்புந்தப்புள்ளி திறக்கப்பட்டு குறைவான விலையில் கோரியுள்ள நிறுவனங்களுக்கு இப்பணி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
![செட்டிநாடு கட்டடக் கலை பாணியில் உருவாகி வரும் கீழடி நிரந்தர அகழ் வைப்பகம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17138313_keeladi.jpg)
மேலும் தற்போது 95 சதவிகித பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், பொருட்களைக் காட்சிப்படுத்துவற்கான பணிகள் நிறைவு பெற்றவுடன் அகழ் வைப்பகம் முதலமைச்சர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்படும் எனவும், இந்த அகழ் வைப்பகத்தைப் பார்வையிடுவதற்கான நுழைவுக் கட்டணம் குறித்து விரைவில் தெரிவிக்கப்படும் எனவும் தொல்லியல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: மாளிகைமேடு அகழ்வாராய்ச்சின் பணிகள்... முதலமைச்சர் ஆய்வு