மதுரை வடக்குவெளி வீதியில் அமைந்துள்ளது பேங்க் ஆஃப் பரோடா. இந்த வங்கியில் பணிபுரிந்துவரும் ஊழியர்கள் உள்பட ஒன்பது பேர் இணைந்து வங்கியின் வாடிக்கையாளர்களால் அடைமானம் வைக்கப்பட்ட இரண்டாயிரத்து 162 கிராம் தங்க நகைகளின் மீது தவறான முறையில் மோசடி செய்ததாக, அதே வங்கியின் மண்டல மேலாளர் சுதாகரன் புகார் அளித்தார்.
அதனடிப்படியில், மதுரை விளக்குத்தூண் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் வாடிக்கையாளர்களால் அடைமானம் வைக்கப்பட்ட நகையைத் தவறாகக் கையாண்டு அதன்மூலம் ஒரு கோடியே 11 லட்சத்து 28 ஆயிரத்து 910 ரூபாய் மோசடி செய்ததாக, வங்கி அலுவலர்கள் பாலகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், ஹரிஹர புத்திரன், குமார பாண்டியன், முத்துக்குமார், வளர்மதி, திவ்யா, லட்சுமி, அருண் முத்துக்குமார் ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இம்மோசடி குறித்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். நம்பிக்கையுடன் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகுவைத்த தங்க நகைகளில் வங்கி ஊழியர்களே மோசடிசெய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பல லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்: பாதிக்கப்பட்டவர்கள் புகார்