கரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை மிகத் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மதுரை - மதிச்சியம் செனாய் நகர்ப் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் என்ற தன்னார்வலர் ஒருவர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நுழைவு வாயில் அருகே முகக்கவசம் அணியாமல், வெளியே சுற்றும் மக்களுக்கு நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
அதாவது தாம்பூலத் தட்டில் வெற்றிலைப் பாக்கு வைத்து முகக்கவசங்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி, அணிந்து கொள்ள வலியுறுத்தியுள்ளார். தன்னார்வலரின் இந்த வித்தியாசமான விழிப்புணர்வு அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆய்வு மாணவருக்கு கரோனா தொற்று: காமராஜர் பல்கலை. துறை மூடல்!