மதுரை: சக்கரம் சுழலாமல் தீப்பொறி பறக்க தண்டவாளத்தில் சென்ற சரக்கு ரயிலை, துரிதமாக செயல்பட்டு நிறுத்தி விபத்தை தவிர்த்த துலுக்கப்பட்டி ரயில் நிலைய அதிகாரிக்கு விருது வழங்கப்பட்டது.
அதாவது, மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட துலுக்கப்பட்டி ரயில் நிலையத்தில் ஆர்.ஜெயபிரகாஷ் என்பவர் நிலைய அதிகாரியாக பணியில் இருந்துள்ளார். அப்போது, நேற்று (டிச.26) துலுக்கப்பட்டி ரயில் நிலையத்தை கடந்த சரக்கு ரயிலில், ஒரு சரக்கு பெட்டியின் சக்கரம் சுழலாமல் தண்டவாளத்தில் தேய்ந்து கொண்டபடியே, தீப்பொறி பறந்து கொண்டே சென்றுள்ளது.
இதனைக் கவனித்த ஜெயபிரகாஷ் உடனடியாக மதுரை கட்டுப்பாட்டு அறைக்கும், சாத்தூர் ரயில் நிலைய அதிகாரிக்கும் தகவல் தெரிவித்து ரயிலை தடுத்து நிறுத்தக் கூறியுள்ளார். அதன்படி ரயில் நிறுத்தப்பட்டு, சக்கரம் சரிசெய்யப்பட்டது. இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதே நாளில் புகலூர் காகித ஆலைக்குச் சென்ற சரக்கு ரயில் பெட்டியின் கதவு ஒன்று திறந்த நிலையில் சென்றது.
இதே நிலையில் தொடர்ந்து சென்றால் அருகில் உள்ள சிக்னல் கம்பங்கள், மின்கம்பங்கள் ஆகியவற்றில் மோதி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதையும் விருதுநகர் ரயில் நிலைய அதிகாரிக்கு தெரிவித்து, ரயிலை நிறுத்தி கதவை மூட செய்துள்ளார். இதன் மூலமும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஒரே நாளில் இரண்டு விபத்துகளை தவிர்க்க உறுதுணையாக இருந்த ஜெயபிரகாசுக்கு, விருது மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
நேற்று நடந்த கோட்ட ரயில் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில், கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீ வத்சவா ஜெயபிரகாஷுக்கு விருது வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் சி.செல்வம், முதுநிலை கோட்ட பாதுகாப்பு அதிகாரி மொகைதீன் பிச்சை, முதுநிலைக் கோட்ட ரயில் இயக்க மேலாளர் வி.பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.