ஜல்லிக்கட்டு மீட்புப் போராட்டம் நடைபெறுவதற்கு முன்பு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, அவனியாபுரம் கிராம மக்கள் சார்பாகவே நடத்தப்பட்டது. தொடர்ந்து ஜல்லிக்கட்டு மீட்புப் போராட்டத்திற்கு பின்பு முதல், ஜல்லிக்கட்டை தென்கால் பாசன விவசாயிகள் ஏற்று நடத்தினர்.
இதனையடுத்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு என்பது அவனியாபுரம் கிராம மக்களால் நடத்தப்படவேண்டும் என்றும் தனி ஒரு சங்கமோ, தனி ஒரு பிரிவினரோ அல்லது தனி நபரால் நடத்தப்படக் கூடாது எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் 2019ஆம் ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டை உச்ச நீதிமன்றம் ஏற்று நடத்தியது.
2020ஆம் ஆண்டும் ஜல்லிக்கட்டு சுமுகமாக நடத்த வேண்டும் என்பதற்காகவே கடந்த சில தினங்களாக அவனியாபுரம் கிராம மக்கள், தென்கால் பாசன விவசாயிகளை அழைத்து சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இறுதி பேச்சுவார்த்தையில் மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் ஒரு உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
இந்த உத்தரவின்படி 'அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அவனியாபுரம் கிராம மக்கள் மற்றும் தென்கால் பாசன விவசாயிகள் சார்பாக நடத்தப்பட வேண்டும். தென்கால் பாசன விவசாயிகள் வைத்திருக்கும் கமிட்டியுடன் அவனியாபுரம் கிராம மக்கள் ஒவ்வொரு சமூகத்திலிருந்தும் ஒருவர் வீதம் கமிட்டியில் சேர்ந்து ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும். அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக் கணக்குகளை வருவாய்த்துறை அலுவலர்கள் முன்னிலையில் நிர்வகிக்க வேண்டும் ' எனக் கூறப்பட்டது.
இந்த உத்தரவு தென்கால் பாசன விவசாயிகளுக்குச் சாதகமாக இருப்பதாகக் கூறி, அவனியாபுரம் கிராம மக்கள் சார்பாக அவனியாபுரம் பேருந்து நிலையத்தில் கண்டன போராட்டம் நடைபெற்றது.